தொடர்ச்சியாக நான்கு வீடியோ கிளிப்பக்களையும் இதில் பார்க்கலாம்
இவை பற்றி லண்டன் daily mail இல் வந்த செய்தியை அழுத்தி பார்க்கவும்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மூன்றுபேரை கொலை செய்து புதைக்கப்பட்ட விவகாரத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின் அவர்களது எலும்புக் கூடுகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்,42; தச்சுத் தொழிலாளி. இவரது மகள் லாவண்யா,19. சேகருடன் பணிபுரிந்த சிலம்பரசன்,27, என்பவருக்கும், லாவண்யாவிற்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததால், கடந்த 2008ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
புகார்: பின் விழுப்புரம் அருகே உள்ள எம்.குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள லாவண்யாவின் உறவினர் முருகன்,45, என்பவரின் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். தகவலறிந்த சேகர் கடந்த 2009ம் ஆண்டு எம்.குச்சிப்பாளையத்திற்கு சென்றார். பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து தனது கணவர் மற்றும் மகளை காணவில்லை என்று நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசில் சேகரின் மனைவி ஜீவா புகார் அளித்தார். இந்நிலையில் முருகன் மகள் பார்கவி,20, அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் சதீஷ் என்பவரை கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்தார். இதற்கு முருகன் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 27ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தங்கள் காதல் விவகாரம் பற்றி பேட்டி அளித்தனர். பின் முருகன், அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்ற போது, பார்கவி தனது தந்தை முருகன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆதரவு தேடிவந்த மூவரை கொலை செய்ததாகக் கூறினார். அதனை தொடர்ந்து, 29ம் தேதி நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற முருகன் வீடு திரும்பவில்லை.
மண்டை ஓடு: இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 மணிக்கு விழுப்புரம் டி.எஸ்.பி., சேகர், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் எம்.குச்சிப்பாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தாசில்தார் ராஜேந்திரன், வி.ஏ.ஓ., முத்தையன் முன்னிலையில் முருகன் வீட்டின் அருகே பார்கவி அடையாளம் காட்டிய இடத்தில், பொக்லைன் மூலம் தோண்டினர். மதியம் 2 மணிக்கு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் புதைந்து கிடந்த இருவரது மண்டை ஓடுகளும், உடல் எலும்புகளும் கிடைத்தன. மாலை 5 மணிக்கு முருகன் வீட்டின் அருகே மற்றொருவரது எலும்புத் துண்டுகள் கிடைத்தன. முருகன் வீட்டின் மண் புதரிலிருந்து கிடைத்த எலும்புக் கூடுகள் சேகர், லாவண்யா, சிலம்பரசன் ஆகியோரின் சடலங்களாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று விழுப்புரம் டி.ஐ.ஜி., சண்முகவேல், எஸ்.பி., பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் கைப்பற்றிய மனித எலும்புகளை சென்னையில் உள்ள மருத்துவப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். மூன்று பேரை கொலை செய்து புதைத்து விட்டு அங்கேயே குடும்பம் நடத்திய முருகன், திடீரென தலைமறைவான சம்பவம் எம்.குச்சிப்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியை விரைவில் பிடிப்போம்: டி.ஐ.ஜி., சண்முகவேல் பேட்டி: டி.ஐ.ஜி., சண்முகவேல் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண், கடந்த 1ம் தேதி, விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர், மகளை காணவில்லை எனக் கூறியிருந்தார். தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், இவரின் கணவர், மகள் இருவரும் கொலை செய்யப்பட்டு, எம்.குச்சிப்பாளையத்தில் உள்ள முருகன் என்பவரின் வீட்டு முன் புதைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. முருகன் வீட்டு முன் தோண்டப்பட்டதில், சில மனித எலும்புகள் கிடைத்துள்ளன. இந்த எலும்புகளை மருத்துவப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு, காணாமல் போனவர்களதுதானா என்பது உறுதி செய்யப்படும். அதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரிக்கும் தாலுகா போலீசார் குற்றவாளியை கூடிய விரைவில் கண்டுபிடித்து கைது செய்வர். இவ்வாறு சரக டி.ஐ.ஜி., சண்முகவேல் கூறினார்.
மகள் ஆவேசம்: தனது தந்தை முருகன், மூன்று பேரை கொலை செய்து, புதைத்த இடத்தை பார்கவி, போலீசாருக்கு அடையாளம் காட்டினார். இறந்தவர்களின் எலும்புக் கூடுகள் கிடைத்தவுடன், பார்கவி, ஆதங்கத்துடன் போலீசாரிடம் கூறுகையில், "ஆரம்பத்தில், எனது தந்தை முருகன், மூன்று பேரை கொலை செய்ததாக நான் கூறியதை யாரும் நம்பவில்லை. ஏற்கனவே நான் கூறியபடி தற்போது மூன்று பேரின் எலும்புகள் கிடைத்துள்ளன பார்த்தீர்களா... இப்போது நான் கூறியது உண்மை தான் என, நிரூபணமாகியுள்ளது' என்றார்.
நன்றி -தினமலர்