லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்பி பார்க்க மாட்டார்கள் என்று விநியோகப்பவர்களின் முன் முடிவுகள் தான் காரணம் தான் என்று நினைக்கிறேன்.
விருதுகள் பெற்ற திரைபடம் அதனால் நல்ல படமாக இருக்கும் என்ற நோக்கில் படம் பார்க்க போகும் பொழுது இருக்கவில்லை .ஆனால் படம் முடித்து திரும்பும் போது நான் எதிர்பார்த்ததிலும் மேலாக ஒரு திருப்தி இருந்தது.இந்த படம் ஆரம்பமாகும் முன்னர் திரைபட விழா முக்கியஸ்தர்கள் பேசினார்கள். அதில் பேசிய ஒரேயொரு தமிழரான பெண்மணி இத் திரை படத்தை பற்றிய முன்னோட்டத்தை கூறும் போது .தாயகத்தில் இருக்கும் பிரச்சனைகளை தாங்கள் இப்ப இருக்கும் புலம் பெயர்ந்த நாட்டிலும் கொண்டு வந்து சேர்க்கிறார்கள் என்று ..அவருடைய அந்த கருத்தில் முழுமையாக எனக்கு உடன் பாடில்லை.இந்த கோஸ்டி மோதலை மையக் கருவாக இந்த படம் எடுக்கப் பட்டமையால் அவ அப்படி கூறியிருந்தார்.நான் அறிந்தவரை இந்த குழுவாக இருந்து மோதலில் ஈடுபடுவது தமிழர்கள் மட்டுமல்ல ,,சீனர்கள் கறுப்பர்கள் கிழக்கு ஜரோப்பியர்கள் சீக்கியர் போன்றோர் வெவ்வேறு கால கட்டத்தில் குழு மோதலில் பிரபலமாகி இருந்திருக்கிறார்கள் ,காலப் போக்கில் ஆரோக்கியமான சமூகமாக தங்களை ஆக்கிய பின்னர் அவர்களிடமிருந்த இந்த போக்கு அகன்று இருந்தது.தமிழர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனையாக கூறியது பேச்சாளரின் தவறான கணிப்பு என்பது எனது கருத்து.
டொரண்டோ நகர இனம் புரியா இரவு நேர அமைதியின் பின்னனியில் திரைபடம் ஆரம்பமாகிறது . ஆரம்பத்திலையே பிரபல குழு தலைவன் மரநாயின் தம்பியை இன்னொரு குழு தலைவனான குமாரின் தம்பி துப்பாக்கியால் சுட்டு கொல்லுகிறான் .குமார் ஆரம்பத்தில் தம்பியை தாக்கியவனை தாக்க போய் அதன் தொடர்ச்சியாக சந்தர்ப்பவசத்தால் ஒரு குழுவுக்கு தலைவனாகிறான் .இவனில் விசுவாசம் வைக்கும் பாசமுள்ள தகப்பனுக்கு மகனா இருக்கும் அன்பு என்ற இளைஞன் .அவனுக்கு சிறு வயது முதல் ஒரு பெண் மேல் காதல் . வாட்டர்லூ பல்கலைகழகத்தில் படிக்கும் அன்புக்கு தெரிந்த குடும்பத்து நேரம் கிடைக்கும் நேரம் போதெல்லாம் பொதுசேவை செய்யும் அமைதியான அகிலன் என்றொருவன்.அன்பு விரும்பும் அதே பெண்ணைத்தான் அகிலனும் விரும்புகிறான்.இவர்கள் இருவரின் காதல் ஒரு தலைக்காதல் என்பது குறிப்படதக்கது.மரநாயின் தம்பியை கொலை செய்த குற்றத்திலிருந்து குமார் தனது தம்பியை பொலிசாரிடமிருந்தும் மரநாயிடமிருந்தும் காப்பாற்ற தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளுகிறான். தனக்கு விசுவாசம் உள்ள அன்புவை இந்த கொலையின் சூத்தரதாரி என மரநாயுடமும் பொலிசாரிடமும் மாட்டி விடுகிறான்.
அன்புக்கும் அகிலனுக்கும் நடக்கும் முக்கோண காதல் பற்றிய பிரச்சனையுடனும் . குமார் மரநாய் பொலிசார் போன்றோரிடமிருந்தும் அன்பு எப்படி மீளுகிறான் என்பதோடு படம் நகருகிறது.அன்புக்கு விசுவாசமான நண்பனாக நடிக்கும் உடும்பன் என்ற ஒரு வயதான இளைஞன். .அன்புவுடன் பழகிய நண்பர்கள் விலகி ஓடும் பொழுது உடும்பன் மட்டும் கடைசி வரையும் மட்டும் அன்புவுடன் துணை நிற்பது போல் உருவாக்கப்பட்ட உணர்ச்சிகரமான பாத்திரம் .கடைசியில் குமாரின் தம்பி பிடிபட போகும் சாத்தியங்கள் தான் என்று தெரியும் வரும் போது அவன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு அழித்து கொள்ளுகிறான் .அன்பு அந்த அன்பான தகப்பனாரின் இருதய நோயையும் சுகப்படுத்தி அமைதியான குடும்ப வாழ்வுக்கு போவதோடு படம் முடிவடைகிறது..
படத்தில் சில காட்சிகள் நாடகத்தனமாக இருக்கின்றன என்று சிலர் சொல்லக்கூடும் .அதை ஈடு கட்டும் விதமாக பின்னனி இசை அற்புதமாக ஒலிப்பதனால் காட்சிகள் எல்லாமே சினிமாத்தனமாகவே இருக்கின்றன. இந்த படத்துக்கு இசை அமைத்தது இன்னும் இலங்கையை வதிவிடமாக கொண்டிருக்கும் இளைஞனாம் .திரை கதையின் திசை மாற்றத்தோடு அதற்க்கேற்றவாறு பின்னனி இசையும் அற்புதமாக பயணிக்கிறது .மற்றும் கதையின் காட்சி அமைப்பை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி காட்டும் தமிழ் படத்தில் இதுவரை வராத புதிய முறை கதை சொல்லலை கையாண்டுள்ளார் இயக்குனர். இதன் மூலம் ஓரே காட்சியை மற்றும் காட்சியின் தொடர்ச்சியை வெவ்வேறு பாத்திரங்களின் பார்வையில் எப்படி இருக்கின்றன என்பதன் மூலம் அழகாக திரைக் கதையை நகர்த்தும் பொழுது இயக்குனரின் திறமை மிளிர்கிறது.
குழு தலைவன் குகனின் உதவியாளார் அன்புவை மாட்டி விடச் சொல்லும் போது மனசாட்சியை விட்டு எப்படி செய்வது என்று தவிக்கும் இடம் நன்றாக இருக்கிறது. காருக்குள் இருந்து தகப்பனாருடன் தொலைபேசியில் உணர்ச்சிபூர்வாமாக பேசும் பொழுது அன்புவின் நடிப்பு நன்றாக இருக்கிறது .அன்புவின் நெருங்கிய நண்பனாக வரும் உடும்பன் என்ற பாத்திரம் அதிகம் பேசமால் அற்புதமாக வெளிப்படுத்த பட்டிருக்கிறது.அகிலனின் நண்பர்களில் ஒருவர் ஆங்கிலத்திலேயே முழுவதும் கதைப்பார் .ஒரு இடத்தில் நண்பரில் ஒருவர் அவரை பார்த்து கூறுவார். உனக்கு நாங்கள் பேசுற தமிழ் உனக்கு விளங்குது தானே? பின்னை என்னத்துக்கு உப்பிடி பேசுறாய்..தமிழிலை கதையன்.. என்ற இடம் மூலம் புலத்தின் வளரும் சிறார்களின் நிலமையை நன்றாக வெளிபடுத்த பட்டிருக்கிறது.காட்சிகள் மூலம் குழு வன்முறையாளர்களிடம் கூட அன்பு ஈரம் மனசாட்சி நட்புத்துவம் இருக்கிறது என வெளிபடுத்தபட்டிருக்கிறது.இந்த படத்தில் இயங்கும் பாத்திரங்கள் அநேகமானவை வில்லத்தனமானவர்களாக சித்தரித்தாலும் நடிப்பு திறமை மூலம் எல்லாரும் கதாநாயகர்களாகவே மிளிர்கிறார்கள்.எதிர்பாராத கதை திருப்பங்களை உருவாக்கி திரைக் கதை நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது, குறிப்பாக இரவு நேர காட்சி அமைப்புகளில் ஒளி அமைப்பு நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் முக்கிய கதாநாயகியான கீதாவையும் முக்கிய வில்லனான மரநாயையும் வருவார்கள் வருவார்கள் என பார்வையாளர்களை எதிர்பார்க்க வைத்து கடைசி வரையும் காட்டாமால் விட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கையிலும் தென்னிந்திய திரைபடங்களின் போர்முலாவை மீறி வாடைக்காற்று , பொன்மணி என்ற படங்கள் வந்த போதிலும் திரும்பவும் தென்னிந்திய திரைபட பாணியையே பின் பற்றினார்கள். இத் திரைபடத்தைப் பற்றி சினிமா சம்பந்தமான அறிவு தங்களுக்குள் கூட இருக்கு என்று நினைக்கிற பண்டிட்டுகள் என்ன குறை கூற வருவார்கள் விமர்சிப்பார்கள் என்று எனக்கும் ஓரளவுக்கு தெரியும். ..அவற்றையெல்லாம் தவிர்த்து ..இது போன்ற நல்ல புலம் பெயர்ந்த தமிழ் சினிமாக்களை பாரட்ட வேண்டும்
இத்திரை படவிழா முடிவுற்ற பின் அங்கு கூடி நின்ற பார்வையாளர்களுடன் உரையாடிய வேற்று இனத்து பத்திரிகையாளர்கள் இந்த படத்தை பற்றி வியந்து பாரட்டியதை கேட்க கூடியதாயிருந்தது
(கதாநாயகன் கதாநாயகி ஆடி பாடும் டூயட் காட்சிகள் அடங்கிய படம் சிட்னியிலும் கனடாவிலும் திரையிட்டு இருந்தார்கள் என்று அறிய கூடியதாய் இருந்தது .திரைபட விழாக்களில் என்ற படியால் அந்த காட்சிகளை தவித்து காட்டி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .உண்மையில் அந்த காட்சிகளை தவிர்த்து காட்டி இருப்பது தான் நன்றாக இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்)
No comments:
Post a Comment