மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.
இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.
மீடியா கேமராமேனும் உடந்தையா...?
இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.
;நன்றி-
http://tamil.oneindia.in/news/2012/07/30/india-mob-molested-the-girls-mangalore-attack-158683.html