வாசகர் வட்டம்

Monday, April 02, 2012

அறுசுவையுடன் சாப்பிடுங்க,,,உணவே மருந்து,,,என்று இவர் -வீடியோ

நாம் தண்ணீர் குடிக்கிறோம். தண்ணீர் குடிக்கும்போது இது கைக்காக அல்லது கழுத்துக்காக என்று தனியாகத் தண்ணீர் குடிப்பதில்லை. சாப்பிடுகிறோம். உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனியாகச் சாப்பிடுவதில்லை. உடல் முழுவதற்கும்தான் சாப்பிடுகிறோம். ஆனால் மருத்துவம் மட்டும் கண்ணுக்கு என்றும், இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கு என்றும், தலைக்கு என்றும் தனித்தனியாகப் பார்க்கிறோம். இது எப்படிச் சரியாகும்?'' என்று கேட்கிறார் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக "செவி வழி தொடு சிகிச்சை' என்கிற பெயரில் தமிழ்நாடு முழுக்க தனது மருத்துவமுறையைப் பிரசாரம் செய்து வருகிறார் பாஸ்கர். ஹோமியோபதி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்துக்கான பட்டயப் படிப்பு முடித்தவர் பாஸ்கர். செவி வழி தொடு சிகிச்சை பற்றி கூட்டங்களில் பேசுவதோடு, அது தொடர்பான டிவிடிகளையும் வெளியிட்டு அச் சிகிச்சை
முறையைப் பரப்பி வருகிறார். அவரிடம் செவி வழி தொடு சிகிச்சையைப் பற்றிக் கேட்டோம்.

""நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ரத்தநாளங்கள் மூலம் செல்களுக்குத் தேவையான பொருள்கள் சென்று சேர்கின்றன. அதுபோல கழிவுகளும் ரத்தநாளங்கள் மூலமாகவே கழிவு உறுப்புகளுக்குச் சென்று வெளியேறுகின்றன. உடலில் உள்ள எந்த செல்லுக்கு நோய் வந்தாலும், அதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.
ரத்தத்தில் உள்ள பொருட்கள் கெட்டுப் போவது ஒரு காரணம். ரத்தத்தில் இருக்க வேண்டிய பொருட்கள் இல்லாமற் போவது இன்னொரு காரணம். நமது உடலுக்குத் தேவையான அளவுக்கு ரத்தம் இல்லாமல் போவது மூன்றாவது காரணம்.
நமது உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்படுகின்றன. அப்படிச் செயற்படாமல் போவது நான்காவது காரணம். நோய் வாய்ப்பட்டவுடன் அல்லது நோயுற்றதாக நினைத்தவுடன் நம் மனம் பாதிக்கப்படுவது ஐந்தாவது காரணம்.
இந்தக் காரணங்களில் முதலில் சொன்ன மூன்று காரணங்களையும் நாம் சரி செய்துவிட்டால் மீதம் உள்ள இரண்டு காரணங்களும் தானாகவே சரியாகிவிடும்.

அப்படியானால் இதயம் பாதிப்படைந்தால், சிறுநீரகம் பாதிப்படைந்தால், கண்கள் பாதிப்படைந்தால் பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய, செல்களுக்குத் தேவையான சத்துகளைத் தரும் ரத்தத்தைச் சரி செய்ய வேண்டும்.
அதாவது ரத்தத்தில் உள்ள பொருள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய எல்லாப் பொருட்களும் உரிய அளவில் இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு ரத்தம் இருக்க வேண்டும். தனியாக இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கும் என்றும் சிகிச்சை தேவையில்லை. இதுதான் செவி வழி தொடு சிகிச்சையின் அடிப்படை.
அப்படியானால் ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை எப்படி அளிப்பது?
நாம் உண்ணும் உணவில் இருந்தே ரத்தத்துக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்க முடியும். அப்படியானால் எதை உண்ணுவது? எப்படி உண்ணுவது?
முதலில் பசி வந்த பின்புதான் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள செல்களுக்குச் சத்துகள் தேவை என்னும்போதுதான் நமக்குப் பசி எடுக்கிறது. எனவே பசிக்காமல் சாப்பிடக் கூடாது.

அடுத்து சாப்பிடும் உணவு நல்லபடியாகச் செரித்து அதிலுள்ள சத்துகள் உடலில் சேர வேண்டும்.
வாயைத் திறந்து, திறந்து அவசர அவசரமாக உணவை விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாயைத் திறந்து மூடுவதன் காரணமாக உணவுடன் காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது.
உணவை வாயில் போட்டவுடன், உதட்டை மூடிக் கொண்டு, உணவு கூழ் போல் ஆகும்வரை மென்று, உணவின் சுவையை நாக்கு உணருமாறு செய்து அதற்குப் பின்பு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாக்கில் ஊறும் உமிழ்நீருடன் உணவு கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. உமிழ்நீர் உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. எனவே அவசரமாகச் சாப்பிடக் கூடாது.
இரண்டாவதாக, சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போது, சாப்பிட்ட பின்பும் நிறையத் தண்ணீர் குடிப்போம். நல்ல பசி உள்ள வேளையில் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ஜீரண நீர்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலில் முழுமையாகச் சேர்வதில்லை.
மூன்றாவதாக, குளித்தவுடனேயே சாப்பிடக் கூடாது. நீங்கள் வெந்நீரிலோ, தண்ணீரிலோ குளிக்கும்போது நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. அப்படி மாறும் வெப்பநிலையை - உடலின் வெப்பநிலைக்கு - அதாவது 37 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் - கொண்டு வர நமது உடலில் உள்ள செல்கள் முழுக்க முயற்சி செய்கின்றன. குளித்து முடித்தவுடன் உடலில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுதலை சரி செய்வதற்காக, உடலின் செல்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நாம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதில் பிரச்னை ஏற்படும். அதேபோன்று சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது.
தண்ணீர் குடிப்பதிலும் நமக்குச் சரியான தெளிவில்லாமல் இருக்கிறோம். எவ்வளவு தண்ணீர் குடிப்பது? உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் தேவைப்படும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதுமானது.
தேவையான அளவுக்குத் தூங்க வேண்டும். தேவையான அளவு தூக்கம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். கடுமையான உடல் உழைப்பாளிக்கு அதிகத் தூக்கம் தேவைப்படும். ஏஸி அறையில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து மூளை உழைப்புச் செய்பவருக்கு அதிகத் தூக்கம் தேவைப்படாது. எனவே தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை விழுங்குவதில் அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வரும்போது தூங்கிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான் செல்கள் உடலில் நன்கு செயல்பட முடியும். செல்லுக்கு அறிவு உண்டு. தேவையான சத்துப் பொருட்கள் உரிய அளவில் இருந்தால் கெட்டுப் போன செல்கள் தம்மைத் தாமே சரி செய்து கொள்ளும்.
எவற்றைச் சாப்பிடுவது? உணவு வகைகளில் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் சுவையுள்ள பழங்கள், வெள்ளரி போன்ற காய்கள் போன்றவற்றுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். அதற்கடுத்து முளைவிட்ட தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைத்த சைவ உணவுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அசைவ உணவு வகைகளுக்கு அதற்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டீ, காப்பி, மது போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.
எவற்றை மட்டும் சாப்பிட்டு நாம் மூன்றுநாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க முடியுமோ, அவையெல்லாம் உணவு. எவற்றை மட்டும் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கும் மேல் உயிரோடு இருக்க முடியாதோ, அவையெல்லாம் உணவு அல்ல. மது போன்றவை உணவல்ல.
உடல் உழைப்பு உள்ளவர்களைத் தவிர, பிறர் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, யோகாசனம் போன்றவற்றைச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம். வந்த நோயையும் சரிப்படுத்திவிடாலாம். இதுதான் நான் கூறும் எளிய மருத்துவமுறை.
உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். சிறுவயது முதல் தீராத தலைவலி, உடலெங்கும் புண்கள், வயிற்று வலி, மலச் சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள்; எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று நொந்து தற்கொலை செய்யும் அளவுக்குப் போய்விட்டேன். உடல் நோய் காரணமாக எந்த இடத்திலும் வேலை செய்ய முடியவில்லை. பல மருத்துவர்களிடம் சென்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் பயனில்லை. அதன் பிறகு, நானே எனக்குச் செய்து கொண்ட மருத்துவம்தான் இது.
ஆனால் வெளிப்புறத்திலிருந்து உடலுக்குத் தாக்குதல் ஏற்பட்டால், உதாரணமாக கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தால் அதை இந்த மருத்துவமுறையின் மூலம் சரி செய்ய முடியாது. அதற்கு மாவுக் கட்டோ, அறுவைச் சிகிச்சையோ செய்துதான் சரி செய்ய முடியும்'' என்றார்.


(நன்றி -தினமணி )



2 comments:

வாகை பிரபு said...

Yes we are following Hr.Baskar's technic.We felt the change in digestion system..
We are giving his free DVD to every in free of cost.

Nice post and timely post congrats...
Regards,
Prabhu.S

Anonymous said...

உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி. கட்டாயம் முயற்சி செய்கிறேன்..