வாசகர் வட்டம்

Wednesday, March 21, 2012

கையால் ஊட்டி விட்ட நோர்வே இந்தியா சர்ச்சை-வீடியோ

நார்வேயில் வாழுகின்ற இந்திய பெற்றோர் சம்பந்தப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கு விவகாரம் இருநாட்டு அதிகாரிகளிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
நார்வேயில் இப்போது அந்நாட்டு குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் இருக்கின்ற இரண்டு குழந்தைகளையும் எப்படியாவது கூடிய விரைவில் இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சிப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை
இந்தக் குழந்தைகளை பராமரிப்பதில் பெற்றோர் போதுமான கரிசனையைக் காட்டவில்லையென்ற குற்றச்சாட்டில் நோர்வே அரசின் குழந்தைகள் நலன்புரிப் பணியகம் குழந்தைகளுக்கான பராமரிப்பை பொறுப்பேற்றது.
ஆனால் தாங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை என்று வாதிடுகின்ற குழந்தைகளின் பெற்றோர், கலாசார ரீதியான வேறுபாடுகளே இந்தப்பிரச்சனைக்கு காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
குழந்தைகளுக்கு கைகளால் உணவூட்டுவதும், குழந்தைகளை பெற்றோருடனேயே படுக்கவைப்பதும், குழந்தைகள் அழும்வேளைகளில் தாய்ப்பால் கொடுப்பதும் இந்திய பின்புலங்களில் வளரும் குடும்பங்களில் நிலவும் வழக்கம் என்பதை நோர்வே குழந்தைகள் நலன்சார் அதிகாரிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது இந்தியப் பெற்றோரின் வாதம்.
ஆனால், குழந்தைகள் பராமரிப்பில் இந்தப் பெற்றோர் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் பராமரிப்பை தாங்கள் பொறுப்பேற்க நியாயமான காரணங்கள் இருந்தன என்றும் பிபிசியிடம் பேசிய நார்வே ஸ்டேவேஞ்சர் நகரிலுள்ள சிறார் பாதுகாப்பு பணியகத்தின் தலைவர் கன்னர் டொரேஸன் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் இந்திய ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டுள்ளதுடன் ஆத்திரம் கலந்த கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த விவகாரம் குறித்து தாங்கள் ஒரு இணக்கப்பாடான தீர்வொன்றை விரைவில் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று கூறியிருந்தார்.
முன்னதாக, பெற்றோரின் உறவினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலைச் சந்தித்து இந்த விவகாரத்தில் உதவும்படி கோரியிருந்தனர்.
மூன்று வயதான அபிக்ஞான் பட்டாச்சார்யா மற்றும் அவனது ஒருவயது தங்கை ஐஸ்வர்யா ஆகியோர் இப்போது நார்வேயிலுள்ள குழந்தைகள் காப்பக இல்லத்தில் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக ஆஸ்லோவிலுள்ள இந்தியத் தூதரகம் கூறியிருக்கிறது.
எனினும் அவர்கள் சொந்தப் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வதே அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்று இந்தியா நார்வேக்கு எடுத்துக்கூறியுள்ளது.

No comments: