வாசகர் வட்டம்

Friday, October 30, 2015

டாஸ்மாக்கை மூடு என்றால் ..பாடிய தோழர் கோவனை மூடி வைச்சிருக்கு தமிழக அரசு-வீடியோ

மூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது !

சரி யார் இந்த கோவன்?


 கோவன்… தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு… நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு’ என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் தெறிக்கும். ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!

“கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். நடவு வயலில் அம்மா விதவிதமாப் பாடுவாங்க. சின்னப் புள்ளையில அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். ‘நெருஞ்சிப் பூ சல்லடையாம், நெஞ்சில் ஒரு வேதனையாம், நெஞ்சுவிட்டு சொன்னேனுன்னா… நித்தம் ஒரு சண்டையாகும்’னு அம்மா ராகத்தோடு இழுத்துப் பாடின பாட்டு இன்னமும் மனசுக்குள்ளயே நிக்குது. அப்பா, ஒரு கோலாட்ட வாத்தியார். அதுக்கு உண்டான பாட்டுகளை ராத்திரி எல்லாம் சொல்லிக்கொடுப்பார். எங்க வீட்டில் இருந்து வெளியே வந்தா, வயக்காடும் வரப்பு மேடும்தான் நிறைஞ்சு இருக்கும். ராத்திரியில் பசங்க வயக்காட்டுல சாக்கை விரிச்சுப்போட்டுப் பாட்டு பாடிக்கிட்டே படுத்து இருப்போம். இப்படி என்னைச் சுத்தி பாட்டும் இசையும் எப்பவும் இருந்தது. சோறு சாப்பிடுறது மாதிரி இசையையும் சேர்த்துச் சாப்பிட்டு வளர்ந்தேன். ஐ.டி.ஐ. முடிச்சு, திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்யும்போது, தோழர்களின் தொடர்பு கிடைச்சது. நான் பாடுறதைக் கவனிச்சு, ‘நாட்டுப்புற உழவர்களே, நகர்புறத்துப் பாட்டாளிகளே… காதைக் கொஞ்சம் திருப்புங்க, கவனமாக் கேளுங்க, உங்க வாழ்வைத் திரும்பிப் பாருங்க’ என்ற பாட்டைப் பாடச் சொன்னாங்க.


முதல்முறையா தெரு முனையில் மக்கள் மத்தியில் பாடுறேன். திடீர்னு போலீஸ் வந்துடுச்சு. எனக்கு வெடவெடன்னு பயம். இயல்பில் நான் ரொம்பப் பயந்த சுபாவம். வீட்டில் அப்படித்தானே வளர்த்தாங்க. ‘நாம கூலி வேலை செய்யுறவங்க. யார் வம்பு தும்புக்கும் போகக் கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருக்கணும்’னு தானே சொல்றாங்க. அதனாலயே, முதல்ல அச்சம்தான் வந்துச்சு. தோழர்கள், பேசி போலீஸை அனுப்பினாங்க. அப்புறமா மெள்ள மெள்ள… மக்கள் மத்தியில் பாட ஆரம்பிச்சப்போதான், ‘போராளிகளின் முதல் தேவை துணிவு’ன்னு புரிஞ்சது. கம்யூனிச சித்தாந்தம் ஒன்று மட்டும்தான் அறிவியல் பூர்வமானது. அதனால் மட்டும்தான் உழைக்கும் மக்களுக்கான விடியலைத் தர முடியும் என்கிற உண்மையை அனுபவபூர்வமா உணர்ந்தப்போ, வேலையை விட்டுட்டு முழு நேரமா அமைப்பில் சேர்ந்தேன். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு சார்பா ஊர் ஊராப் போய்ப் பாடுவோம்.

 ‘சாமக் கோழி கூவும் நேரத்திலே, நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம். விளக்குவைக்கிற நேரம் வரை நாங்க வியர்வையும் காயாமப் பாடுபட் டோம்’கிற பாட்டுதான் நான் முதன் முதலில் எழுதினது. அம்மா வயக்காட்டில் பாடின நடவுப் பாட்டில் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டுப் பாடுவோம். பிறகு, இசை கத்துக்கிட்டு, நாங்களே மெட்டு போட்டுப் பாட ஆரம்பிச்சோம். சினிமா பாடல்களையே கேட்டுப் பழகிய மக்களிடம், அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளைப் பாடல் வழியா கொண்டுபோனோம். நாங்க கலைக் குழு தோழர்கள் திடீர்னு கிளம்பி அறிமுகம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குப் போவோம். உள்ளூர்ப் பிரச்னைகள், முரண்பாடுகளை விசாரிச்சுத் தெரிஞ் சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் பாடுவோம். பல கிராமங்களில் ‘நீங்க சாதி, மதத்தை எல்லாம் திட்டுறீங்க. வீணா வம்பு வரும்’னு முதலில் சண்டைக்கு வருவாங்க. கடைசி யில் அவங்களே பாசத்துடன் வந்து பேசுவாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் ‘இன்னிக்கு சாப்பாடும், தங்குற இடமும் நீங்கதான் தரணும்’னு அறிவிப் போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தோழரை அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சு, அவங்க சாப்பாட்டை எங்களுக்கும் கொஞ்சம் தருவாங்க. ராத்திரி எல்லாம் அந்தக் குடும்ப உறுப்பினர்கள்கூட சமூகத்தைப் பற்றியும், அரசியல்பற்றியும் பேசுவோம். இப்பவும் ஊர் ஊராப் போறோம். மக்கள்கிட்ட பாடி, அவங்க வீட்டில் சாப்பிட்டு, அங்கேதான் தூங்கி எழுந்து வர்றோம். எங்க பாடல்கள் அனைத்தும் 11 சி.டி-க்களா வந்திருக்கு.


 நாங்கள் மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காகப் பாடலை, அனுதினமும் மக்களை வதைக்கும் துன்ப துயரங்களையும், அவர்களை வழிநடத்தும் தவறான அரசியலையும் அம்பலப்படுத்திப் பாடுகிறோம். அதற்கு சரியான ஒரே தீர்வு… புரட்சிதான் என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிறோம். கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் சொல்வதால் அல்ல; 

இயல்பிலேயே உழைக்கும் மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், அது கம்யூனிசத்தால் மட்டும்தான் முடியும். அதற்காக, ‘புரட்சி… புரட்சி’ என்று நிலவைக் காட்டி சோறு ஊட்டவில்லை. இந்து மத வெறி, தாமிரபரணி நதி… கோகோ கோலா வுக்குத் தாரை வார்க்கப்பட்ட கொடூரம், தேர்தல்தோறும் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் பச்சை சந்தர்ப்பவாதம் என நடப்புப் பிரச்னைகளைவைத்தே மக்களிடம் பேசுகிறோம்.

பாபர் மசூதி இடிப்பு சமயத்தில், இந்து மத வெறிக்கு எதிராகப் பிரசாரம் செய்தபோது, ராமேஸ்வரத்தில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் மேடையிலேயே தாக்கப்பட்டோம். ராமநாதபுரத்தில், அ.தி.மு.க-காரர்கள் அடித்தார்கள். கட்சி பேதம் இல்லாமல் ஊழல்வாதிகளை, சந்தர்ப்பவாதிகளைத் தொடர்ந்து கறாராக அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் உருவாக்கிய பல பாடல்கள் வெவ்வேறு முற்போக்கு இயக்கங்களால் பல இடங்களிலும் பாடப்படுகின்றன. இன்று நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் முதலாளித்துவத்துக்கும், மறு காலனி ஆதிக்கத்துக்கும் எதிராகத் தொடர்ந்து பாடல்கள் மூலம் பிர சாரம் செய்கிறோம்.

உழைக்கும் மக்கள் நாங்கள் முன்வைக் கும் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்கள். நாங்கள் சமூகமாற்றத் துக்கு இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி உயிருக்கு நிகரான செங்கொடியை ஏந்தி திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பில் இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள் இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!” ______________________

  நன்றி: ஆனந்த விகடன் ______________________

Friday, October 23, 2015

என்ன மச்சி ..காஞ்ச கருவாடு மாதிரி வந்து நிற்கிறாய்?..

Monday, October 19, 2015

ரஜனி-தங்க தட்டில் யாரும் தேங்காய் விற்பாங்களா? நடிகர் சங்க விழாவில் -வீடியோ

Sunday, October 11, 2015

'''பொம்பிளை சிவாஜியை''' ..தெரியாதோ நோக்கு தெரியாதோ-வீடியோ




சென்னை: உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பழம் பெரும் நடிகை மனோரமா நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் திரையுலகில் ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் பழம் பெரும் நடிகை மனோரமா. 78 வயதாகும் அவர் 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த வாரம் கூட சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடல் தேறிய நிலையில் இருந்த அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று இரவு 10.50 மணியளவில் அவருக்கு வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

 இதை அறிந்த திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் தி.நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரபலங்கள் அஞ்சலி: மனோரமா இறந்த செய்தி அறிந்து திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள் முதல் திரையுலக கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் அவர் வீட்டுக்கு திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


 தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைந்த நடிகை மனோகரமா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர் நடிகை மனோரமா கலை உலகின் தாய் என்றும் சேலை கட்டிய சிவாஜி என்றும் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர் திரையுலகை ஆட்சி செய்து வந்தவர் ஆச்சி என கூறினார்


  நன்றி -தினகரன்.

Friday, October 02, 2015

ஊருக்கு ஒரு சாராயம்....தள்ளாடுது தமிழகம்-வீடியோ