வாசகர் வட்டம்

Wednesday, December 11, 2013

கெட்ட பய சார் அவன்-ரஜனி (மீள் பதிவு)


அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர் ரஜனிகாந்த்.

இதே கஸ்துரியார் வீதியூடாக முப்பது வருடங்களின் பின் ராஜா தியேட்டரில் எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுடன் திரும்பி கொண்டிருக்கும் பொழுது அன்றைய சம்பவம் எனக்கு அன்றும் மறக்காமால் ஞாபகத்துக்கு வந்தது .அன்று யார் என்று தெரியாமால் இருந்த நடிகன் இன்று பேச்சிலும் மூச்சிலும் நன்கு பரிச்சியப் பட்ட சூப்பர் ஸ்டாராகி இருந்தார்.இவர் என்று சூப்பர் ஸ்டார் ஆகினாரோ அன்றிலிருந்து நல்ல நடிகன் என்ற ஸ்தானத்தில் இருந்து இறங்கி கடவுள் என்ற ஸ்தானத்தில் உயர்த்தப் பட்டு சிலுவையில் அறையப் பட்டு இருக்கிறார்.

ரஜனி ஸ்டைல் நடிகர் என்ற அடைமொழிக்குள் அகப்பட்டாலும் கமல் போல நல்லதொரு நடிகன் அவர் .அவருடைய ஆறிலிருந்து அறுபதுவரை அவள் அப்படித்தான் முள்ளும் மலரும் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றல் மூலம் நிரூபித்தும் இருக்கிறார் .ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்திருக்கும் பொழுது அவரது லட்சிய கனவு ஒரு வெஸ்பா ஸ்கூட்டரும் பிளாட் வீடுமாகவே இருந்தது .இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,பின் அவரே எதிர்பார்க்காத உயரத்துக்கு லட்சங்கள் கோடிகளுடன் சென்று விட்டார்.

70 களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஒரு மாறுதல் வந்தது .வெறும் கதாநாயக வழிப்பாட்டுடன் வெளி வந்த படங்களிலிருந்து சிறிது மாற்றம் வந்து டைரக்சன் மற்றும் சினிமா தொழிநுட்பங்கள் கூடிய பொறிமுறையுடன் கூடிய படங்கள் வெளிவர தொடங்கின. பல நாடகங்களை அரங்கேற்றிய பாலசந்தர் தனது நாடகப்பாணியலையே திரைபடங்களை உருவாக்கினார் .70 களில் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் சினிமாத்தனமான முயற்சிகளை காட்டி தமிழ் திரை உலகுக்கு வித்தியாசமான பக்கத்தை அறிமுகபடுத்தினார். அந்த காலம் பாலசந்தரை சத்தியத்ரேயை பற்றி தெரியாத எங்களுக்கு தென்னிந்திய சத்தியத்ரே என்று ஊடகங்கள் அப்பொழுது பூச்சாண்டி காட்டியது.உண்மையில் சில காட்சிகள் அப்பட்டமாகவே சத்தியத்ரேயின் படங்களில் திருடி தனது படங்களில் தனக்கேற்ற மாதிரி அமைத்து இருந்தார் பின்னர்தான் காலம் தெரியவைத்தது.

வெறும் மசாலா படங்கள் பார்த்த எங்களை போன்ற இளைஞர்களுக்கு சினிமா என்றது வித்தியாசமான தொடர்பு சாதனம் என்பதை அறிமுகபடுத்தியதில் பாலசந்தர் பங்குள்ளது என்பதை மறுக்கமுடியாது. பாலசந்தர் அறிமுகபடுத்திய ரஜனி என்பதால் அவர் பால் அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது . ரஜனியின் மானரிசம் என்பது பலராலும் சிலாகித்து கூறும் வார்த்தை அப்பொழுதும் அல்ல இப்பவும் பேசப்படுகிறது .இந்த ஒரு வகை ஸ்டைல் மூலம் நடிப்பை காட்டும் இம்முறையை ஆங்கில படங்களில் மசாலா பட நாயகன் சார்ள்ஸ் பிறவுன்சன் போன்ற நடிகர்கள் செய்வதை பலர் பார்த்திருப்பார்கள் . நம்ம சிவாஜி கணேசன் கூட இந்த ஸ்டைல் நடிப்பு மூலம் பல படங்களில் நடித்திருக்கிறார் .ஆனால் அவருடைய மிகைபடுத்தல் நடிப்பு காரணமாக அது விமர்சனத்துகு உட்படுத்தபட்டது ,ரஜனியின் ஸ்டைல் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு டைரக்சனுக்கு அடங்கி வெளிப்பட்டதால் ஓரளவு யதார்த்தமாக தெரிந்தது ..அதனால் பலரால் அப்பொழுது சிலாகிக்கப்பட்டது.

ரஜனி உடல் நலம் இல்லாமால் இருக்கிறார்.அத்துடன் அவர் பற்றிய வித்தியாசமான வதந்திகள்,தமிழ் தொடர்புசாதனங்களை இப்ப ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன் ...ரஜனிக்கு உண்மையில் நடந்தது என்ன ?என்ற மில்லியன் டொலர் கேள்வியாக ஒலித்து கொண்டிருக்கு.சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்கு செல்ல முன்பு ஒலிநாடவில் எனக்கு பணம் கொடுங்கிறாங்கள் நடிக்கிறன் ,இதை விட என்னத்தை நான் உங்களுக்கு திருப்பி செய்யப்போறன்.என்று.சொல்லியிருக்கிறார் ..இது தான் உண்மை ..செய்ய நினைத்தாலும் அவர்களின் விடிவுக்கு ஒன்று செய்ய முடியாது என்பது தான்

ரஜனி சாதரண கண்டக்டர் என்று கூறிக்கொண்டாலும் ஒரு பட்டதாரி . பட்டதாரி பட்டத்துக்கு அப்பாற்றப்பட்டு அவர் பல விசய ஞான விடயங்களை தேடி அறிந்திருக்கிறார் .ஜி. கிருஸ்ணமூர்த்தியை பற்றி விவாதிப்பார் ,,தமிழில் புதுமைபித்தன் ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்றோரை கூட விரும்பி வாசித்திருக்கிறார் ..புலம் பெயர் எழுத்தாள்ர் ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை கூட வாசித்து சிலாகித்து இருக்கிறார் என்று பத்திரிகையில் வந்த கொசுறு செய்தி பார்த்த ஞாபகம்.யோகா தியானம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவருக்கு வருத்தங்கள் வரக்கூடாது என்று இல்லை .ஆனால் யோகா மூலம் மற்ற நடிகர்களுக்கு இல்லாத உடல் வாகுடன் இருப்பதால் எந்த அசைவு செய்தாலும் கவர்ச்சியாக மாறுகிறது. இந்த வயது வந்து கூட இவரது இப்பவும் உடம்பை பார்த்தால் கல்லு மாதிரி இருக்கிறது. மற்றும் எந்த உடை அணிந்தால் கூட அழகாகவும் இருக்கிறது.

.இந்த யோகா தியானம் போன்றவற்றை நான் ஒரு கலையாக நினைப்பதால் எனக்கும் சிறு வயதிலிருந்து ஈடுபாடு கூட.. ரஜனியை பொறுத்தவரையில் எனக்கு ஒரு ஆச்சரியம் சந்தேகம் இவ்வளவு காலமும் இருந்து வந்ததது? .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார்? ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ?... அண்மையில் எங்கையோ கூறியிருந்தார் தனது வெற்றிக்கு தியானம் தான் முழு காரணமும் என்று..பாபா விசயம், மற்றும் யாரும் கடவுள் என்று சொல்லி கொண்டு திரிந்தால் சாதரண பித்தலாட்டம் செய்பவனாக இருந்தாலும் கூட அவரிடம் போய் ஆசி ஆலோசனை கேட்க போகிறது போன்ற இப்படியான விசயங்களினால் அவர் கோமாளியாக போவதுமுண்டு .அவரை மென்டல் என்று பழிப்பவர்களின் கருத்துகளுக்கு இது வலுவூட்டியதாகவும் விட்டு விடுவதுமுண்டு.

யோகா தியானம் போன்றவை செய்து குடி சிகரெட் அதீத மாமிச பாவிப்புடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுக்குள் அடங்காமால் இவ்வளவு காலமும் தள்ளி ஒரு வெற்றியடைந்து விட்டார் என்று உண்மை தான் . என்றாலும் அண்மையில் அவரது உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அல்லது வதந்திகள் எல்லாம் இவர் தோற்று விட்டார் என்பதை உணர்த்துகின்றன..

அவருடைய நோயுக்கு ஊடகங்கள் புது புது காரணங்களை சொல்லுகின்றன். அவர் மேற்கத்தைய மருத்துவத்தை நம்பமால் ஆயுர்வேத மருந்துகளை அதிகம் உட்கொண்டமையாலேயே அவரது கிட்னி பாதித்தது என்பது. எம்ஜியாரும் திடகாத்திரமான உடற்பயிற்சி செய்து உடம்பை வயதான காலங்களிலும் கூட கட்டாக வைத்திருந்தவர் ,வேறு தேவைகளுக்காக தங்க பஸ்பம் சாப்பிட்டதாலையே நோய் வந்தது என்பதுக்கு இது ஒப்பாகும். வேறு ஒரு வட நாட்டு ஊடகம் ஹீந்தி நடிக நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது ஒரு அமர்வில் 9 அல்லது பத்து பெக் மது அபிரிதமாக அருந்துவார் என்று ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளது. எது எப்படியோ ரஜனியின் மருமகன் தனுஸ் விரைவில் சுகமாகி திரைபடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் ..திரைபட செல்வந்த தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து ....அவர்களும் காத்திருக்கிறார்கள்..சாதாரண முட்டைக்கு கூட வழியில்லாத அப்பாவி ரசிகனும் காத்திருக்கிறான்...

ரஜனி சுகமாகி வந்து நடிப்பார் என்று..வாழ்த்துவோம் 
அவர்களைப் போல

No comments: