இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Friday, August 07, 2009
('WHAT IS IT '?) என்ன அது ?- வீடியோ
வாழ்க்கையிடம் இருந்து எதை கற்றுக்கொண்டு இருக்கிறோம், எதை கைவிட்டு இருக்கிறோம் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் இதை பற்றியது தான்'WHAT IS IT'என்ற குறும் படம் ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம் கிரேக்க தேசத்து சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தர வேண்டும் என்று நினைத்தால் இந்த படத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து அளியுங்கள்
படம் ஒரு வீட்டு தோட்டத்தில் தொடங்கிறது.புல்வெளிக்கு நடுவில் உள்ள ஒரு பெஞ்சில் வயதான அப்பாவும் மகனும் உட்காந்து இருக்கிறார்கள்.மகன் நியூஸ் பேப்பர் படித்து கொண்டு இருக்கிறான்.அப்பாவுக்கு 60 வயது இருக்கலாம் புல்வெளியை பார்த்தபடி இருக்கிறார்.அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக்கிளையில் உட்காருகிறது.அதை அப்பா கவனமாக பார்க்கிறார்.குருவி தாவி பறக்கிறது.அது என்னவென்று மகனிடம் கேட்கறார்.அவன் குருவி என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்கிறான்.அவர் மறுபடியும் அதையே பார்த்து கொண்டு இருந்துவிட்டு அது என்னவென்று கேட்கிறார்.
அவன் குருவி என்று அழுத்தமாக சொல்லுகிறான்.இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வால் அசைக்கிறது.அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார்.மகன் சற்றே எரிச்சலுடன் 'குருவீப்பா. கு...ரு...வி'..என்று ஒவ்வோரு எழுத்தாக சொல்லுகிறான்.குருவி ஒரு கிளை நோக்கி பறக்கிறது.அப்பா மறுபடியும் கேட்கிறார...அது என்ன? மகன்..''குருவி..குருவி..எத்தனை தடவை சொல்லுவது? உங்களுக்கு அறிவு இல்லையா? என்று கோபத்தில் வெடிக்கிறான்.அப்பா மெளனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து தனது பழைய டைரி ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி ''உரக்கப்படி''என்கிறார்.அவன் சத்தமாக படிக்கிறார்.
என் மகனுக்கு மூன்று வயதாகியபோது அவனை பூங்காவுக்கு அழைத்து போனேன்.அங்கே ஒரு குருவி வந்தது.அது என்ன என்று பையன் கேட்டான்.குருவி என்று பதில் சொன்னேன்.அவன் அதை உற்று பார்த்து விட்டு அது என்னவென்று மறுபடியும் கேட்டான்.நான் அதே உற்சாகத்துடன் குருவி என்று பதில் சொன்னேன்.திருப்தி அடையாத என் மகன் 21 முறை அதே கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.நான் எரிச்சல் அடையாமால் கோபம் கொள்ளாமால் ஒவ்வொரு முறையும் சந்தோசமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனை கட்டிக்கொண்டேன் என்று அந்த டைரியில் உள்ளது.
டைரியை படித்து முடித்த மகன்,அப்பா போல் ஏன் பொறுமையாகத் தன்னால் பதில சொல்ல முடியவில்லை என்று உணர்ந்தவன் போல,அப்பாவின் தலையை கோதி அவரை கட்டி கொள்ளுகிறான்.அத்துடன் படம் முடிகிறது
முதியவர்களின் கேள்விகள் அறியாமையில் இருந்து எழுவதில்லை.மாறாக ஆதங்கத்தில்,இயலாமாயில்,பயத்தில் இருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்து போனோம் என்பதை இப்படம் நினைவூட்டுகிறது.
நன்றி- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் ஆனந்தவிகடனில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி மேலுள்ளவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment